கோட்டாபய உண்மை பேசுவதால் சரியானதை செய்வார்! சம்பந்தனின் நம்பிக்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியல்வாதியாக இருக்காத காரணத்தினால் அவர் உண்மைகளை பேசுகின்றார். ஆகவே அவர் சரியானதை செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அதிகார பரவலாக்கல் மூலமாக தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுத்தால் நாம் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவோம்.

கோட்டாபய ராஜபக்ச அரசியல்வாதியாக இருக்காத காரணத்தினால் அவர் உண்மைகளை பேசுகின்றார். ஆகவே அவர் சரியானதை செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

எனினும் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள ஜனாதிபதியால் முடியாமல் போயுள்ளதென்றால் அதற்கு தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள முடியாமல் போனமையே காரணமாகும்.

அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் மூலமாக தீர்வு காணப்பட வேண்டும் என்ற முயற்சிகள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது. ஆனால் தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காணப்பட முடியவில்லை.

எனவே இந்த புதிய அரசாங்கம் உறுதியான தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்த நாட்டில் பல்லின சமூகங்கள் வாழ்கின்றனர். எனினும் இந்த நாட்டில் பெளத்த சிங்களமக்கள் பெரும்பான்மை மக்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

எனினும் ஏனைய சமூகங்களும் வாழ்கின்றனர். அவர்களை புறக்கணிக்க முடியாது. ஏனைய மக்களின் கலாசாரம், சமூக கட்டமைப்பை மதிக்க வேண்டும்.

நீண்டகாலமாக இந்த கட்டமைப்பு உள்ளது. எமக்கு எவருடனும் முரண்பட வேண்டும் என்ற நோக்கம் இல்லை, அனைத்து மக்களுடனும் ஒன்றுபட்ட நாட்டுக்குள் நல்லிணக்கமாக வாழ வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *