480 ரூபாவுக்கு குளிர்சாதனப் பெட்டியால் சுய இன்பம் பெற்றேன்!!

எனது முகத்தோற்றம் வடிவேலப் போல இல்லை என்டு தெரியும். அது வேற முகம் இது வேற முகம். ஆனால் வடிவேலுவுக்கு நடப்பது போலதான் எனக்கும் கனக்க சிக்கல்கள்கள் நடந்திருக்கு.

நடக்கின்றது. நான் சின்னவயசிலிருந்தே இவ்வாறான சிக்கல்களை எதிர்நோக்கி இருக்கிறன். என்ர முகத்தைப் பார்த்து முறைக்கிறவங்களில் தெருவில் நின்று மோட்டார் சைக்களில் லைசன்ஸ் கேட்கும் பொலிசுக்காரர்களும், சைக்கிளில் நான் போகும் போது என்னை மட்டும் பார்த்து துரத்தும் தெரு நாய்களுக்கும் மட்டுமே நான் ”ரெரர்” (பயங்கரவாதி)  முகத்துடன் தெரியுறன்.

என்ர உற்ற நண்பர்கள் என நினைத்வர்களும் எனது உறவுகள் என நினைத்தவர்களும் என்னைப் பேயன் விசரன் என நினைத்துச் செய்த வேலைகள் ஏராளம். பல தடவைகள் ஏமாற்றப்பட்டுள்ளேன். ஆனால் அவற்றை நான் பொறுத்துக் கொண்டு இருந்தது உண்மை.  எனது மனச்சாட்சிக்கு விரோதமில்லாத அதி பயங்கரமான வேலைகளை என்ர முகத்தைக் காட்டாமல் பல இடங்களில் செய்து முடித்துள்ளேன். அது அந்தக் கடவுள்களுக்கு மட்டும் தெரிந்த விசயம். ஆனால் எனது முகத்துடன் நான் எதிர்நோக்கும் பல சிக்கல்களை என்னால் தீர்க்கமுடியாது திண்டாடியுள்ளேன். திண்டாடி வருகின்றேன்.

ஏராளமானவங்கள் என்னை அந்நியன் படத்தில வாற ”அம்பி” மாதிரித்தான் நினைச்சு அலங்கோலங்கள் செய்து கொண்டு இருக்கிறவங்கள்.

அது எனது முகத்தோற்றத்தில் உள்ள தவறோ என் நான் பல தடவைகள் சந்தேகித்ததுண்டு.  எனது தோற்றம் மற்றும் நடத்தைகளை  வைத்து என்னை இலகுவில் மட்டுக்கட்டிவிடுவார்களோ என பல சந்தர்ப்பங்களில் நினைத்ததுண்டு.

உதாரணமா நான் மீன்சந்தைக்குப் போனால் உடன நாறல் மீனை என்ர தலையில் கட்ட பாப்பாங்கள். நான் மீனிட பூவைக் காட்டுங்கோ பாப்பம் என்டால் ”உனக்கு அதுவும் பாக்க தெரியுமோ” என்டு ஏளனமா கதைக்கிறவங்கள். நான் நினைக்கிறன் அந்த மீன்காரனை நான் பூவைக் காட்டு பாப்பம் என்டு மரியாதை இல்லாத வார்த்தையால் கேட்டிருந்தால் எனக்கு மரியாதை தந்திருப்பான்.

மோட்டார் சைக்கிளில் நான் ஒழுங்கா போனாலும் பின்னால முன்னால போறவங்களோட சில நேரம் சண்டை பிடிச்சிருக்கிறன். அந்த நேரம் எல்லாம் அவங்கள் என்னை பச்சைத் துாசணத்தில் பேசி கேவலப்படுத்தி விட்டு போடுவாங்கள். ஒருக்கா இதே போல் என்னை ஏசியவனை நானும் அவனிலும் விட திறமான பச்சை துாசணத்தில் ஏசிய போதுதான் மெதுவா அந்த இடத்தை விட்டு போனான். அப்பத்தான் நினைச்சன் அவனவனு்ககு தக்க போல வாழ வேணும் என்டு. ஆனாலும் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை.

சரி இனி விசயத்துக்கு வருவம்

ஒரு கிழமைக்கு முதல் என்ர குளிர்சாதனப் பெட்டிக்குள்ளால புகை கிளம்பியுள்ளது. என்ர மனுசி கரண்ட நிப்பாட்டிப் போட்டாள். நான் வேலையால வந்தாப் பிறகு இந்த விசயத்தைச் சொன்னாள். நானும் பெட்டியைத் திறந்து பாத்தன். புகை மணம் வந்தது. எனக்கு குளிர்சாதனப் பெட்டியின் ஒப்பரேட்டிங் சிஸ்ரம் பற்றி ஒரு அறுப்பும் தெரியாது. அதால நான் அதில ஆராய்ச்சி பண்ணேல. அது வாங்கியது 2009ம் ஆண்டு. எல்.ஜி பிறிட்ச். யாழ்ப்ாணத்தில் அபான்ஸ் முகவரிடம் வாங்கியது. உடன அந்த பிறிட்சிட பில்லை தேடி எடுத்து மனிசி தந்தாள். பார்த்தேன். அதில் இருந்த நம்பருக்கு கோல் பண்ணிய போது அவர்கள் ஒரு நம்பர் தந்தார்கள். அதுதான் சேவிஸ் இட நம்பர் என. அந்த நம்பருக்கு பிறிட்ச் பழுதாகியது பற்றி தெரிவித்தேன். ” பிறிட்ச் வந்து பார்ப்பதற்கு சேவிஸ் சாஜ்ச்” 850 ரூபா என ஒரு பொம்பிளைப் பிள்ளையின் குரல் சொல்லியது. எங்கள் வீட்டுக்கு பிறிட்ச் தேவை அதி முக்கியமானது. அதனால் ”பறவாயில்லை உடனடியாக வந்து பாருங்கள்” என சொன்னேன்.

அடுத்த நாள் ஒரு டயலொக் இலக்கத்தில் இருந்து தம்பி ஒருவர் ”அண்ணை நாங்கள் அபான்ஸ்சில் இருந்து வாறம் பிறிட்ச் திருத்த, உங்கட இடம் எங்கயண்ணை” என்டு மரியாதையா கேட்டான். நானும் தம்பி நீ கல்வியங்காட்டு சந்தியில வந்து நில் நான் வாறன் என்டு சொல்லிட்டு அவன் அந்த சந்தியில வந்தவுடன் என்ர வீட்ட கூட்டிக் கொண்டு வந்திட்டன்.

அவன் பிறிட்சை ஆராய்தான். உடன சொன்னான் அண்ணை பிறிட்சின் காஸ் அறங்கி விட்டுது போல கிடக்குது. செரியான செலவு வரும். அதுதான் புகை வந்திருக்கு என்டு. ஆனால் என்ர மூக்கு அந்த பிறீச்சை மணந்த போது அதில் எரிந்த மாதிரி வாசம்தான் வந்தது. நான் உடன அது தொடர்பா சந்தேகம் கேட்டன். ”தம்பி பிறிட்சின் காஸ் மணம் புகையின் மணம் போலவோ இருக்குறது” என்டு. அவனுக்கு விளங்கிட்டுது நான் கொஞ்சம் சந்தேகப்படுறன் என்டு. உடன பிறிச்சிட டீபிறிசர் பகுதியை கழட்டினான். அதில் தேமோஸ்டார் என்ற பகுதி எரிந்து விட்டது என்டு சொன்னான். நானும் சரி தம்பி ஒருக்கா மாத்தி விடுங்கோவன் என்டு சொன்னன்.  ”அண்ண இது இப்ப என்ன விலை என்டு தெரியாது. நான் இதைக் கொண்டு போய் ஒப்பீசில பார்த்து தான் விலை கேட்டு சொல்ல வேணும்” என்டு அவன் சொன்னான்.

நானும் சரி என்டு அதை கொடுத்து விட்டேன். போகும் போது அவன் சொன்னான் அண்ணை எல்லாம கழட்டின படி கிடக்குது. பிறிட்சில கை வைக்காதீங்கள். நட்டுகள் தொலைந்து விடும் என்டு சொல்லிட்டு சேவிஸ் சாஜ் 850 ரூபாவும் வாங்கிக் கொண்டு போயிட்டான். அவன் பிறகு கோல் எடுத்து சொன்னான் விலையை. நான் அப்படியே சொக்காகிட்டன். அந்த தேமோஸ்ராறின் விலை 8500 ரூபா வரும் என்டும் அதை பொருத்துற கூலி 2500 ரூபா வரும் என்டும் சொல்ல எனக்கு இடி விழுந்துட்டுது. என்னட “கோதரி“ வேலை இது என்டு நான் ஏங்கிப் போனன்.

அப்பத்தான் எனக்கு திடீர் என்டு திருப்ப என்ர முகத்திட ஞாபம் வந்திச்சு. ”அட பாவி இவனும் என்னை அந்த மாதிரி பெக்கோ என்டு நினைச்சிட்டான் போல கிடக்கு. வஞ்சகமில்லாமல் அவனோட கதைச்சு சிரிச்சுக் கொண்டு நின்டது தப்பா போச்சே” என்டு உடன எனக்கு ஒரு விரக்தி தோன்றிச்சு.

என்னடா இது. அந்த தேமோஸ்ரார் கீழே நான் போட்டிருக்கிற படத்தில இருக்குது. ஒரு சின்ன சாமான். இதுக்குப் போய் இந்த விலை சொல்லுறாங்கள். பிறிச்சே அந்த விலை போகாது என்டு பெரும் அதிர்ச்சியா இருந்திச்சு. கோண்டாவிலுக்கு நான் போய் சிங்கர் சேவிஸ் நிலையத்தில ஒரு சந்தேகத்தில விசாரித்தன். சிங்கர் பிறிச்சிட தேமோஸ்ரார் என்ன விலை என்டு. அவங்கள் சொன்னாங்கள் அதுட மொடல்களைப் பொறுத்தது. இருந்தாலும் 1000 ரூபாவுக்குள்ள வரும் என்டு.

அப்பத்தான் யோசிச்சன் அந்த தம்பி என்னை பெக்கோ என்டு நினைச்சுட்டான் என்டு.

இருந்தாலும் பேஸ்புக் என்டுற கருட புராணம் இருக்குது. அதை வைச்சு இவங்களுக்கு ஒரு வேலை பாக்க வேணும் என்டு நினைச்சுக் கொண்டு செயலாற்ற வெளிக்கிட்டன்.

அந்த தேமோஸ்ரார் விலையை திருப்பவும் அந்த  அபான்ஸ் நிலையத்தில் உறுதி செய்தேன்.  அவன் கொண்டு போய் வைத்திருந்த எனது எரிந்த தேமோஸ்ராறை அங்கிருந்து வாங்கி யாழ்ப்பாணத்துக்கு போனன். அங்க ஒரு கடையில விசாரிக்க அந்த கடைக்காரன் சொன்னான் தம்பி நியுலங்காவில போய் பாருங்கோ. இந்தச் சாமன் இருக்கும் என்டு. அங்க போய் அதுட விலையைக் கேட்ட போது அது வெறும் 480 ரூபாவாக இருந்திச்சு

நான் என்னட்ட இருந்ததை காட்டி இதுதான். இதைப் போலதான் வேணும் என்டு சந்தேகத்தில திருப்பிக் கேட்ட போதும் ”தம்பி இதுக்குத்தான் இந்த விலை” என்டு சொல்ல எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் கேட்டேன் இதை எங்கட வீட்ட வந்து பொருத்தி விடுவிங்களோ என்டு. அவர் வெகு சுலபமா ஒரு வார்த்தை சொன்னார். தம்பி அதுக்குள்ள கிடக்கிற வயரை இதுக்குள்ள சொருகிப் போட்டு கவரை வைச்ச மாதிரி வைச்சா சரி என்டு..... எனக்கு அப்பிடி இருந்தும் அம்மிச்சம் போகேல. பெருமாள் கோவில் றோட்டில இருக்கிற பிறிட்ச் திருத்திற கடையில போய் கேட்டன். அவரும் அந்த தேமோஸ்ராரைப் பார்த்திட்டு அது பொருத்தலாம் என்டு சொன்னார், நான் கேட்டேன் ”வந்து யாராவது பொருத்தி விடுவீர்களா” என. அவர் சொன்னார் ”இது நீங்களே பொருத்தலாம். சின்ன விசயம் என்டு சொன்னார். நானும் அதுக்கு மேல் கதைக்காமல் வந்துட்டன்.

வீட்ட வந்து அந்த தேமோஸ்ரைலை வைத்து சுத்திச் சுத்தி பார்த்தேன். பிறிட்சையும் சுத்திப் பார்த்தேன். மூளைக்குள்ள கொஞ்சம் பொறி தட்டியது. இதைப் பொருத்தலாம் என்டு. ஆனால் அந்த தேமோஸ்ராரின் நீண்ட கம்பி என்னைக் குழப்பியது. இதை எதுக்குள்ள சொருகுறது என்டு. உடன கடவுள் போல இருக்கிற Youtube சிந்தனையில் பொறி தட்டியது. அதில் அடித்துப் பார்த்தேன். கடவுள் கண் திறந்தார். 2 மணி நேரம் சிரமப்பட்டு பிறிட்சை வேலை செய்யப் பண்ணி விட்டேன்.  அந்த நேரம் எனக்கு இருந்த சந்தோசம் என்ர மனிசி பிள்ளைகளைப் பெற்று தந்ததிலும் பார்க்க பெரிதா இருந்திச்சு.  வேலை செய்யிற பிறிட்சை அடுப்படிக்குள்ள இருந்து வந்து பார்த்த மனிசி அதைப் பார்த்துட்டு என்னைப் பார்த்த போது ” இந்த விசயத்திலும் நீ ஆம்பிளைதாண்டா”  என்டுறது போல கிடந்திச்சு.

பிறிட்சை வேலை செய்யப் பண்ணிவிட்டு திருப்ப அபான்ஸ் சேவிஸ் நிலையத்துக்கு அம்பியாகத்தான்.  போனன். அங்கு நின்ட பொ்ம்பிளைப்பிள்ளையிடம் அந்த தேமோஸ்டார் ஒரு கடையிலும் இல்ல. நீங்கள்தான் தரவேணும் என்டு கதையை விட்டு அங்க நிண்டவங்களிட மூளையைக் கழுவி ஒருமாதிரி அந்த தேமோஸ்ராரிட  மதிப்பீட்டு (Estimate) விலைப் பட்டியலையும் சேவிஸ்சாஜ்சிற்கான பற்றுச்சீட்டையும் பெற்றேன். அங்க பில் எழுதுற பிள்ளை என்ர முகத்த பார்த்து பில் எழுதேக்க இவளும் என்னை பேயன், ஏமாளி என்டு நினைச்சுத்தான் பில் எழுதுறாள் என்டு எனக்கு சுள் என்டு ஏறியது.  அடக்கிக் கொண்டு பில்லைப் பெற்றேன். அதற்கிடையில் அங்க இருந்த சீ.சீ.ரீவி கமராவில் என்ர முகத்தை தெளிவாக ஒருக்கா காட்டி சிரித்து விட்டுத்தான் வந்தேன். ........

இதுதான் என்ர பழுதடைந்த தேமோஸ்ரார்.

இதுதான் என்ர பழுதடைந்த தேமோஸ்ரார்.

அவர்கள் அந்த தேமோமீற்றருக்கு அந்த விலைதான் நிர்நயித்திருப்பார்கள். அது அவர்களின் பிழை அல்ல. அவர்ளும் வியாபாரத்திற்காக பல செயற்பாடுகளை செய்திருப்பார்கள். அவர்களை நான் கெட்டவர்கள் என்றோ ஏமாற்றுக்காரர்கள் என்டோ சொல்லவில்லை. ஆனால் 10176.40 சதம் பெறுமதியான ஒரு வேலையை 480 ரூபாவுடன் முடிக்கவும் முடியும் என்பதை நான் அறிந்து கொண்டேன்

இதில் எனக்கு இருக்கும் சந்தேகம் என்னவென்றால் 2057.14 ரூபாவும் 8119.32 ரூபாவும் போட்டுள்ளார்கள். அந்த சதக் கணக்கு எப்படி வரும் என்டுதான் யோசனையா கிடக்கு.

 நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகமும்.

இதை வாசிக்கிறவைகளுக்கு நான் சொல்ல வாறது என்னவெண்டால் தன் கையே தனக்கு உதவி என்டு காரியத்தைச் செய்து பாருங்கள். வெற்றியோ தோல்வியோ மிகச் சிறந்த ஒரு தனிப்பட்ட இன்பம் மனதுக்கு கிடைக்கும்.

பேஸ்புக் என்ட கருட புராணத்தின்படி எது நடந்ததோ அது நன்றாகவே நடக்கும்..........

நன்றி

 

Vasantharuban Thanapalasingam முகப்புத்தகம்