சுமந்திரனை மாட்டி விட்டு லண்டனுக்கு தப்பி ஓடிய சம்பந்தன்!

 தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஊடகவியலாளர்களின் கேள்விக் கணைகளுக்கு பயந்து நாட்டை விட்டே ஓட்டம் பிடித்து உள்ளார் என்று ஊடக வட்டாரங்களில் நக்கல் அடிக்கப்படுகின்றது.

எதிர் கட்சி தலைவர் என்கிற வகையில் இன்று இவர் எதிர் கட்சி தலைவர் அலுவலகத்தில் ஊடக மாநாடு நடத்துகின்றார் என்று ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இவர் நேற்று முன் தினம் விமானம் ஏறி இலண்டன் சென்று உள்ளார்.

இவரின் சார்பில் எதிர் கட்சி தலைவர் அலுவலகத்தில் எம். ஏ. சுமந்திரன் இம்மாநாட்டை நடத்துவார் என்று பின்பு அறிவிக்கப்பட்டது.

சம்பந்தர் இம்மாநாட்டை நடத்துகின்ற பட்சத்தில் பல கேள்விகளை கேட்க ஊடகவியலாளர்கள் கங்கணம் கட்டி இருந்தனர்.

* ஒற்றையாட்சி முறையில்தான் தீர்வு காணப்படும் என்று அரசாங்கம் கூறுகின்றது. சமஷ்டி முறை தீர்வுதான் வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு முழங்குகின்றது. ஆனால் அரசாங்கத்தின் ஒற்றையாட்சி தீர்வு முயற்சிக்கு பலம் சேர்ப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற அரசமைப்பு சீர்திருத்தத்துக்கான குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் அங்கம் வகிக்கின்றாரே?

* நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மார்பு தட்டுகின்றது.ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பால் மக்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலும் கிடப்பிலேயே உள்ளன. சம்பந்தருக்கு எதிர் கட்சி தலைவர் பதவியும், அடைக்கலநாதனுக்கு நாடாளுமன்ற பிரதி தவிசாளர் பதவியும், மாவை சேனாதிராசா போன்றவர்களுக்கு மாவட்ட அபிவிருத்திக் குழு இணை தலைவர் பதவியும் கிடைத்ததை தவிர அரசாங்கத்துடனான இணக்க அரசியல் மூலமாக தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையையும் உருப்படியாக பெற்று கொடுக்க கூட்டமைப்பால் முடியவில்லை. எனவே இணக்க அரசியல் மூலம் பெற்று கொண்ட இப்பதவிகளில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எம். பிகள் விலகுவார்களா?

* தமிழ் மக்கள் பேரவையை அமைத்து உள்ள வட மாகாண் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனால் முன்வைக்கப்பட்டு உள்ள பிரச்சினைகள் உண்மையானவைதான் என்று சம்பந்தர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு உள்ளார். ஆனால் சுமந்திரனோ விக்னேஸ்வரனை கடிந்து கொண்டு இருக்கின்றார். ஏன்?

இவ்வாறெல்லாம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்கப் போகின்றனர் என்று அறிந்து கொண்டே சுமந்திரனை இங்கு மாட்டி விட்டு சம்பந்தர் பறந்து விட்டார் என்று கூறப்படுகின்றது.

இரு வாரங்களுக்கு முன்னர் கனடாவில் தமிழ் உணர்வாளர்களால் சம்பந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஆனால் உடல் நிலையை காரணம் காட்டி இவ்விழாவில் கலந்து கொள்ளாமல் பிரதிநிதியாக சுமந்திரனை அனுப்பி இருந்த சம்பந்தன் இப்போது திடீரென்று இலண்டன் சென்று உள்ளமை ஊடகவியலாளர்களால் சுட்டிக் காட்டப்படுகின்றது.

இனப் பிரச்சினைக்கு தீர்வு காண கூடிய தருணம் தற்போது ஏற்பட்டு உள்ளது, இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கவே இம்மாநாடு நடத்தப்படுகின்றது மாநாட்டின் ஆரம்பத்திலேயே கூறிய சுமந்திரன் ஊடகவியலாளர்களின் ஏனைய கேள்விகளுக்கு பதில் கொடுக்க முடியாது என்று சொல்லி தப்பி கொண்டார்.