இலங்கையை விவசாயத்தில் தன்னிறைவடையச் செய்வதே குறிக்கோள்!- ஜனாதிபதி

இலங்கையை விவசாயத்தில் தன்னிறைவடையச் செய்வதற்கான செயற்திட்டத்தை 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமுல்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரியால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் – மெதிரிகிரிய பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த மகாவலி விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்டு, வெற்றியாளர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே ஸ்ரீலங்கா ஜனாதிபதி இந்த தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில்,விவசாயத்தை மையப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் பாரிய செயற்திட்டமொன்றை 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தவுள்ளோம்.

எமது நாட்டை வறுமையிலிருந்து முழுமையாக மீட்கும் வருடமாக 2017 ஆம் ஆண்டை பிரகடனப்படுத்தியுள்ளோம். இந்த கனவை நனவாக்கிக்கொள்ள வேண்டுமானால் விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம்.

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட எமது நாட்டின் விவசாயிகள் தன்னிறைவு அடைந்தால் மாத்திரமே நாம் பொருளாதாரத்தில் அபிவிருத்தியை அடைய முடியும். அதேவேளை வறுமையையும் முற்றாக ஒழிக்க முடியும் என்பதை நான் திடமாக நம்புகின்றேன்.

இதன்போது விவசாயிகளுக்கான கடன் சுமையை இரத்துச் செய்யவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அதேபோல் மகாவலி கிராமங்களை மையப்படுத்தி அங்கு வாழும் படித்த இளைஞர், யுவதிகளுக்கு வருமானம் ஈட்டிக்கொள்ளக்கூடிய தொழிற்சாலை கட்டமைப்பொன்றை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

நாடு எதிர்நோக்கியுள்ள கடன்சுமையிலிருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளுக்கே இந்த ஆண்டு முன்னுரிமை கொடுத்தோம். இதற்கமைய அடுத்த ஆண்டு நாட்டை விவசாயத்தில் தன்னிறைவு அடையச் செய்வதற்கான திட்டத்தை முன்னெடுத்து, எவரிடமும் கையேந்தாத ஒரு சமூகத்தை கட்டியெழுப்பவே நாம் திட்டமிட்டுள்ளோம்.

சிலர் எம்மீது பலவிதமான குற்றச்சாட்டுக்களை சுமத்தலாம். அவை குறித்து நாம் அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நாம் நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி செயற்படும் போது இவ்வாறான விமர்சனங்கள் வருவது இயல்பானது என ஜனாதிபதி தனது உரையின்போது தெரிவித்தார்.