ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வு இன்று!

மொரகஹகந்த நீர்த்தேக்க அங்குரார்ப்பண நிகழ்வு மற்றும் நினைவுப் படிகம் பதிக்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

சுமார் பன்னிரண்டாயிரம் கோடி ரூபா செலவில் அமைக்கப்படும் இந்த நீர்த்தேக்கம் , பராக்கிரம சமுத்திரத்தை விட ஆறுமடங்கு பாரியதாகும்.

மொரகஹகந்த மற்றும் களுகங்கை ஆகிய ஆறுகளை இணைத்து பாரிய நீர்த்தேக்கமொன்றை உருவாக்கி அதன் மூலம் விவசாயம் மற்றும் மின் உற்பத்தி தேவைகளுக்கு அதனைப் பயன்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

அதன் பிரகாரம் மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் வருடமொன்றுக்கு மூன்று போக விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நீர்ப்பாசன வசதி மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளது.

அத்துடன் தேசிய மின்பகிர்மானக் கட்டமைப்புக்கு 25 மெகாவொட் அளவான மின்சாரமும் இங்கிருந்து உற்பத்தி செய்யப்படவுள்ளது.

இன்று காலை ஒன்பதரை மணியளவில் நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.