நல்லாட்சி தவறிழைப்பதற்கு யாருக்கும் இடமளிக்கப்படமாட்டாது: ஜனாதிபதி

நல்லாட்சி பெயர்ப்பலகையின் பின்னால் நின்றுகொண்டு தவறிழைப்பதற்கு அரசியல்வாதிகளுக்கோ அல்லது அரச அதிகாரிகளுக்கோ இடமளிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

எல்லோரும் தமது மனசாட்சிக்கு ஏற்ப செயற்படவில்லையாயின் மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பு தகர்ந்துவிடும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி, நல்லாட்சி மற்றும் நல்லிணக்க எண்ணக்கருக்களை வெற்றிபெறச்செய்து நாட்டையும் மக்களையும் வெற்றிபெறச்செய்ய எல்லோரும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் எனத் தெரிவித்தார்.

இலங்கையின் அபிவிருத்தி சவால்கள் என்ற தலைப்பில் நேற்று பிற்பகல் பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஒரு விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அரசாங்க அதிகாரிகளுக்கு விடுக்கப்படும் அழுத்தங்கள் தொடர்பாகவும் அவர்களது மனக்குறைகள் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க பாரபட்சமற்ற ஒரு நடுநிலையான நிறுவனக் கட்டமைப்பை தாபிப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் தவறிழைப்பார்களேயானால் அவர்களுக்கு அரசாங்க அதிகாரிகளுக்கு அதுதொடர்பாக கைநீட்ட முடியாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஒழுக்கப் பண்பாட்டின் அடிப்படையிலான நல்லாட்சி எண்ணக்கருவை பாதுகாத்து ஒரு சிறந்த சுபீட்சமான தேசத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பாக முதலாவது முன்மாதிரியாக இருக்கவேண்டியவர்கள் அரசியல்வாதிகளாகும் என்றும் குறிப்பிட்டார்.

இன்றிருக்கும் பொருளாதார நிலைமைகளில் நாட்டிடைக் கட்டியெழுப்புவதற்காக செய்யவேண்டியது ஒருவரையொருவர் குற்றம் சுமத்திக்கொண்டிருக்காது தாம் பொறுப்பேற்ற விடயங்களை உரிய முறையில் நிறைவேற்றி நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.