19 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த 2 வாலிபர்கள்: கட்டி வைத்து அடித்ததில் ஒருவர் பலி

ஆந்திர மாநிலத்தில் 19 வயது இளம்பெண் ஒருவரை பலாத்காரம் செய்து கொலை செய்து தற்கொலை நாடகமாடிய 2 வாலிபர்களை பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்தனர். அதில் ஒருவர் இறந்துள்ளார்.

குண்டூர் மாவட்டம், தவுலாதேவி கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த ஜாஸ்மின் என்ற 19 வயது பெண்ணை வெமுலா ஸ்ரீசாய் மற்றும் ஜென்னா பவன் குமார் என்ற இரண்டு வாலிபர்கள் கடுமையாக தாக்கி பலாத்காரம் செய்து பின்னர் கழுத்தில் பெல்டால் இறுக்கி கொலை செய்து சீலிங் பேனில் தற்கொலை செய்துகொண்டுள்ளது போல் தொங்கவிட்டுள்ளனர்.

பின்னர் ஊரில் உள்ளவர்களை வரவழைத்து வீட்டில் தனது விருப்பத்திற்கு மாறாக திருமண ஏற்பாடு செய்ததால் அந்த பெண் தற்கொலை செய்துகொண்டார் என அந்த வாலிபர்கள் நாடகமாடினர்.

அந்த பெண்ணின் உடலை பேனில் இருந்து இறக்கும் போது அவரது உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த ஊர் மக்கள் அந்த இரண்டு வாலிபர்களையும் மரத்தில் கட்டி வைத்து அடித்தனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வாலிபர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில் ஸ்ரீசாய் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பவன்குமார் என்ற இளைஞருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.