போதைப்பொருள் கடத்தல்களை முறியடித்த பொலிஸாருக்கு இடமாற்றம் ஏன்? டக்ளஸ் கேள்வி

கடந்த இரு வருடங்களில் கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் கடத்தல்களை முறியடித்துள்ள தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஐவர் யாழ் மாவட்டத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த இரு வருட காலத்துள்ளாக கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தல்கள் சம்பவங்கள் ஐந்தினை மிகவும் திறமையான முறையில் முறியடித்து, அவற்றைக் கைப்பற்றியிருந்த யாழ்ப்பாணம், நெல்லியடி, இளவாலை, வல்வெட்டித்துறை ஆகிய பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றியுள்ள தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஐவர் இடமாற்றப்பட்டுள்ளனர். அத்துடன், ஏற்கனவே குற்றத் தடுப்பு பிரிவில் கடமையாற்றியுள்ள இவர்களுக்கு தற்போது சிறு குற்றத் தடுப்பு பிரிவில் பணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. இதற்கான காரணம் கண்டறியப்பட வேண்டும்.

வடக்கு மாகாணமானது தற்போதைய கால நிலையில் கேரள கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை அதிகமாகக் கடத்தக் கூடிய கேந்திர நிலையமாக மாறி வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் நான் பல முறை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளேன். இதற்கென குறிப்பிட்ட கடத்தல் சம்பவங்கள் நடைபெற்றுவரும் பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களில் அப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் பொலிஸார் பணியில் அமர்த்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தியுள்ளேன்.

இவ்வாறானதொரு நிலையில் அவ்வாறான கடத்தல் சம்பவங்கள் அதிகமாக இடம்பெறுகின்ற பகுதிகளிலிருந்து, கடத்தல் சம்பவங்களுக்கு எதிராக திறமையுடன் பணியாற்றி வந்துள்ள தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், அவ்வாறான கடத்தல் சம்பவங்கள் இல்லாத பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளமையானது சந்தேகத்தை தருகிறது. எனவே, இது குறித்து உடனடியாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.