யாழில் அதிகரிக்கும் குற்றச்செயல்களுக்காக பாராளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தாவால் எழுப்பப்பட்ட கேள்வி

அதிக குற்றச்செயல்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறுவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதனால் மக்கள் பதற்றமான நிலையில் இருப்பதாகவும் இந்த நிலைமைக்குக் காரணம் என்னவென அவர் பாராளுமன்றத்தில் வினாவைத் தொடுத்துள்ளார்.

பாராளுமன்றம் காலை 10.30க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஒன்று கூடிய பின்னர் சபையில் முக்கியமான நடவடிக்கைகள் பூர்த்தியடைந்த பின்னர் 23இன் கீழ் 2இன் கீழ் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்

போதை பொருள் பாவனை மற்றும் கடத்தல் ,வாள்வெட்டுக்கள், கொலை, கொள்ளை, அச்சுறுத்தல்கள், சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் வன்முறைகள் போன்ற சமூகத்தைச் சீர்குலைக்கும் சம்பவங்கள் அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இவ்வாறான குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்ற நிலையிலும், குற்றச் செயல்கள் குறைவின்றி அதிகரித்து வருகின்றன.

ஏற்கெனவே, நான் இந்தச் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது குற்றச்செயல்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பதிலளிக்கப்பட்டது.

இவ்வாறு பதிலளிக்கப்பட்ட பின்னரும் யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்கள் குறைவின்றித் தொடர்ந்ததையே காணக்கூடியதாக இருந்தது.

குடா நாட்டில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களினால் , நான் உட்பட பல்வேறு அரசியல்வாதிகள் , சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள், நீதிபதிகள் போன்ற பல்வேறு தரப்பினரும், பல்வேறு வேண்டுகோள்களை முன்வைத்து வந்த நிலையில், அதிக குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 'ரொக் டீம்' என்ற குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தக் குழு கைது செய்யப்பட்ட பின்னும் யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்கள் இடம்பெறுவதற்கு காரணம் என்ன ? மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்வதற்கு எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது பற்றி அரசாங்கம் அறியத்தர வேண்டும்' என்று மேலும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.