யாழில் அதிகரிக்கும் குற்றச் செயல்களின் பின்னணிகள் கண்டறிதல் அவசியம்!

யாழ் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பிலான பின்னணிகள் பல சந்தேகங்களை எழுப்புவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அரச தரப்பினரிடம் எடுத்துக் கூறியுள்ள செயலாளர் நாயகம் அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதானது, யாழ் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள், போதை வஸ்து பாவனை போன்ற பல குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன.

அந்த வகையில், தொடரும் கொள்ளைச் சம்பவங்களின்போது கொள்ளைக்;கு உட்படுகின்ற வீட்டினர், தாங்கள்; யாரென்பதைக் வெளியில் கூறினால் கொல்லப்படுவீர்கள் என கொள்ளையர்களால் எச்சரிக்கப்படுகின்றனர் எனத் தெரியவருகிறது.

அதே நேரம், தென்பகுதியிலிருந்து வரும் நபர்களிடம் கொள்ளைகள் இடம்பெறாத நிலையில், அவர்களும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகின்றனர் எனவும்.இவ்வாறான சம்பவங்கள் அதிகாலை 2 மணிக்கும் 3 மணிக்கும் இடையில் இடம்பெறுவதாகவும் தெரியவருகிறது.

இச்செயற்பாடானது, யாழ் மக்கள் மத்தியில் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்ற அதே நேரம், அப்பகுதியானது ஏனைய பகுதியினது மக்கள் வருகைதர உகந்த பகுதியல்ல என்றதொரு நிலைப்பாட்டைத் தோற்றுவிப்பதாகவும் அமைந்துவருவதைக் காணக்கூடியதாகவுள்ளது.

தொடர் கொள்ளைச் சம்பவங்கள் ஒருபுறம் இடம்பெற்றுவரும் நிலையில், வாள் வெட்டுச் சம்பவங்கள், அடிதடிகள் மூலம் யாழ்பாணத்துச் சமூகம் பதற்றமான நிலையிலேயே தொடர்ந்து வைக்கப்படுகின்றது.  

அத்துடன் இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் இளம் வயதைக் கொண்டவர்களாக இருப்பதையும் காணக்கூடியதாகவுள்ளமை வேதனை தரக்கூடிய விடயமாகும். இத்தகைய சம்பவங்கள் தொடர்பாக கடந்த மாதம் 23ம் திகதி பண்ணையில் வைத்து கைது செய்யப்பட்டவர் 17 வயதுடையவர் என்றும்,   26ம் திகதி அரியாலையில்  கைது செய்யப்பட்டுள்ள 6 பேரும் 25 வயதிற்குக் குறைந்தவர்களெனவும் தெரியவருகிறது. இது, எமது எதிர்கால சமூகத்தின் முன்னேற்றத்தின் மீதான பலத்த சவாலாகவே அமைகிறது. எனவே, இவ்வாறான நிலைமைகள் யாழ் மாவட்டத்திலிருந்து உடனடியாக களையப்பட வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறானதொரு நிலை ஏனைய மாவட்டங்களில் காணக்கூடியதாக இல்லை. எனவே, திட்டமிட்டதொரு செயலாகவே யாழ் மாவட்டத்தில் இது தொடர்வதாகத் தெரியவருகிறது. இதனைத் தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கைகள் பரந்தளவில் விரிவுபடுத்தப்பட வேண்டும். அதே நேரம் இதன் பின்னணிகள் தொடர்பில் கண்டறியப்பட்டு, அவை முழுமையாகத் துடைத்தெறியப்பட வேண்டும். 

இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொற்வதற்கு வசதியாக பொது மக்களின் உதவிகளை நாட முடியும் என்பதால், அம் மக்கள் மத்தியில் உரிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை பொலிஸாரும், ஏனைய உரிய அரச அதிகாரிகளும், சமூக பொது அமைப்புகளும், கல்வி சார் நிறுவனங்களும் முன்னெடுக்க முன்வர வேண்டும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.