யாழ் மக்கள் இனி அச்சமடைய தேவையில்லை! இராணுவ தளபதி அறிவிப்பு

யாழ். மாவட்டத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே மக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.யாழில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர், வடக்கு வாழ் அனைத்து இன மக்களும் பாதுகாப்பு துறையினருக்கு மிகுந்த ஒத்துழைப்புக்களை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனையிட்டு நாம் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நாம் யாழில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம். எதிர்க்காலத்திலும் இந்நடவடிக்கை ஸ்திரப்படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக பாடசாலைகள், மதஸ்தலங்களின் பாதுகாப்பையும் நாம் பலப்படுத்தியுள்ளோம்.

எனவே, எவரும் அச்சமின்றி தமது அன்றாட வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லலாம் என்பதை இவ்வேளையில் கூறிக்கொள்கிறேன். மக்களின் பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம்.

அதேநேரம், சந்தேகத்திற்கிடமான எந்தவொரு நபரையோ பொருளையோ கண்டால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் நாம் கேட்டுக்கொள்கிறோம். மக்கள் எதற்கும் அச்சப்படத் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.