முல்லைத்தீவில் சிங்கள மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று, கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் குடியேறியுள்ள சிங்கள மக்களினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

 கொக்கிளாய், முகத்துவாரத்தைச் சேர்ந்த மக்களுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வீடுகள் வழங்குவதற்கென அடிக்கல் நாட்ட முற்பட்ட வேளை அந்த திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

 இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலே இந்த போராட்டம் தற்போது இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று காலை ஒன்றுகூடிய மக்கள் செயலகத்திற்குள் செல்ல முற்பட்ட போது செயலக வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். 

இதனை தொடர்ந்து மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடுவதற்கு போராட்டக்காரர்கள் மூவரை பொலிஸார் அனுமதித்துள்ளனர். 

 தொடர்ந்து 1 மணி நேர கலந்துரையாடலையடுத்து, குறித்த விடயத்திற்கான தீர்வு தொடர்பில் தெரிவிப்பதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். 

 அதன்பின்னர் மாவட்ட செயலாளர் போராட்டக்காரர்களை சந்தித்து விடயம் குறித்து கூறியுள்ளார். 

 இதனை ஏற்க முடியாதெனவும், உடனடியாக தீர்வு வேண்டுமெனவும் மக்கள் கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்ததோடு மாவட்ட செயலாளர் குறித்த இடத்தை விட்டு சென்றுள்ளார். 

 மீண்டும் போராட்டக்காரர்களில் மூவர் மாவட்ட செயலாளரை சந்தித்துள்ளனர். இதன்போது மாவட்ட செயலாளர், இன்று மாலை குறித்த இடத்துக்கு நேரில் வருகைதருவதாக உறுதிமொழி அளித்துள்ளார்.இதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளனர்.