இலஞ்சம் மற்றும் ஊழல் இல்லாமல் சேவையாற்றுகின்ற உத்தியோகத்தர்களாக மாற்ற வேண்டும்!

வடக்கில் இலஞ்சம் மற்றும் ஊழல் இல்லாமல் சேவையாற்றுகின்ற உத்தியோகத்தர்களாக மாற்ற வேண்டும் என்பதே வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவனின் நோக்கமாக உள்ளது என வடமாகாண பிரதி பிரதம செயலாளர் நந்தினி ஸ்ரான்லிடிமேல் குறிப்பிட்டுள்ளார்.

'இலஞ்சம்' மற்றும் 'ஊழல்' இல்லாத நிர்வாக கட்டமைப்பை உருவாக்குதல் எனும் கருப்பொருளில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற கருத்தமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் முழுமையாக இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் வட மாகாணத்தினை புதிய ஆளுனர் பொறுப்பேற்றுள்ளார்.

முழுமையாக இதனை எல்லா இடங்களிலும் அமுல்படுத்துவதற்கு முன் அரச நிறுவனங்களில் இலஞ்ச ஊழலை இல்லாமலாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் முதலில் திணைக்கள தலைவர்களுக்கு குறித்த பயிற்சியை வழங்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில் முதலாவதாக குறித்த பயிற்சி நெறி மன்னாரில் இடம்பெற்றதோடு, தொடர்ந்து ஏனைய நான்கு மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படும். இலஞ்ச ஊழல் பலரிடம் இல்லாமல் இருக்கின்றது.

சிலரிடம் இருந்து கொண்டிருக்கின்றது. இலஞ்ச ஊழல் திணைக்களம், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உள்ளிட்ட பலஅமைப்புக்களை காலத்திற்கு காலம் அரசாங்கம் உருவாக்கி இலஞ்சம் ஊழலை இல்லாது ஒழிக்க வேண்டும் என்று முயற்சி எடுத்தாலும் பல்வேறு சம்பவங்கள் பாதிவாகிக் கொண்டிருக்கின்றன.

சில தினங்களுக்கு முன் பாடசாலை அதிபர் ஒருவரை இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்துள்ளனர்.

இலஞ்சம் ஊழல் இன்னும் இருந்து கொண்டிருக்கின்றது என்பதற்காக இதற்கான விழிர்ப்புணர்வை திணைக்கள தலைவர்களுக்கு கொடுத்து அவர்கள் மூலம் அந்த திணைக்களத்தில் உள்ள ஏனைய அலுவலகர்களை இலஞ்சம் ஊழல் இல்லாத உத்தியோகஸ்தர்களாக மாற்ற வேண்டும் என்பதே வடமாகாண ஆளுனரின் நோக்கமாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.