சென்னையில் ஆர்யா-சாயிஷா ரிசப்ஷன்: குவியும் திரையுலகினர்

நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் 'கஜினிகாந்த்' என்ற படத்தில் நடித்தபோது காதல் வயப்பட்டனர். இருவரின் பெற்றோர்களும் இந்த காதலுக்கு பச்சைக்கொடி காட்டியதை அடுத்து இவர்களது திருமணம் கடந்த வாரம் ஐதராபாத்தில் ஆடம்பரமாக நடந்தது. இந்த திருமணத்தில் பாலிவுட், டோலிவுட், கோலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் ஆர்யா-சாயிஷா ரிசப்சன் இன்று சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், பி.ஆர்.ஓக்கள் உள்பட பல திரையுலகினர் கலந்து கொண்டு நட்சத்திர தம்பதிகளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் சாயிஷா நடிப்பார் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. முதல்கட்டமாக தேனிலவு முடிந்தவுடன் தன்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்த இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வரும் ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட உள்ளாராம் சாயிஷா. அதன்பின்னரும் நல்ல கேரக்டர் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பார் என்று கூறப்படுகிறது.