பிரதமரிடம் வடக்கில் வைத்து டக்ளஸ் விடுத்த முக்கிய கோரிக்கை!

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பிரதமர் தலைமையில் இன்றையதினம் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக இரண்டு மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10‍ ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அந்த நிதி போதாது எனவும் அந்நிதியை 25ஆயிரம் ரூபாவாக அதிகரித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் என இதன்போது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே இரணைமடுக் குளத்தின் நீர் முகாமைத்துவம் சீரின்மை காரணமாகவே மக்களுக்கு இவ்வாறான அனர்த்தம் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா துறைசார்ந்தவர்களின் அசமந்த போக்கும் கவனயீனமும் இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் துறைசார்ந்த அமைச்சரூடாக விரைவான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதிபடத் தெரிவித்துள்ளார்.<