கமலுக்கு மட்டும் கால்ஷீட்டா? பூஜாகுமார் பதில்

விஸ்வரூபம் முதல் பாகத்தில் நடித்த பூஜாகுமார் தற்போது அப்படத்தின் 2ம் பாகத்திலும் நடித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: விஸ்வரூபம் முதல்பாகத்தில் கமல் மனைவியாக நடித்திருந்தேன். முதல்பாகத்தில் எனது கதாபாத்திரம் எப்படி முடிந்ததோ அதிலிருந்து 2ம் பாகத்தில் தொடர்கிறது. கணவனின் பாசம் தெரியாமல் அவருடன் சண்டையிடும் பெண்ணாக முதல்பாகத்தில் நடித்திருந்த நான் 2ம் பாகத்தில் அவர் நாட்டின் மீது வைத்துள்ள பற்றை புரிந்துகொண்டு அவருக்கு உதவியாக இருப்பேன்.

கடந்த 5 வருடமாக கமல்சாருடன் இணைந்து நடித்திருக்கிறேன். விஸ்வரூபம் 2ம் பாகத்தில் எனக்கு ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கிறது. நீருக்கு அடியிலும் ஆக்‌ஷன் காட்சிளில் நடித்திருக்கிறேன். கமல் படங்களில் மட்டும் நடிப்பது ஏன் என்கிறார்கள். அவர் வாய்ப்பு தருகிறார் நடிக்கிறேன். இதற்கிடையில் மீன்குழம்பும் மண்பானையும், தெலுங்கில், பிஎஸ்வி கருடசேவா படங்களிலும் நடித்தேன். மேலும் சில படங்களில் நடிக்கிறேன்.

யார் வாய்ப்பு தந்தாலும் நான் நடிப்பேன். கமலின் ஏக் தூஜே கே லியே படம் பார்த்ததிலிருந்து அவரது ரசிகையாக இருக்கிறேன். நடிகராக, தயாரிப்பாளராக, அரசியல்வாதியாக அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். அவரிடம் நான் கற்றுக்கொண்ட பெரிய விஷயம் எந்த வேலையை செய்தாலும் அது முடியாது என்று கைவிடாமல் பிடிவாதமாக இருந்து செய்து முடிப்பார். வாழ்க்கையின் நீண்ட பயணத்தில் வெற்றி தோல்விகள் நிறைய வரும்.

திரைப்படத்தை பொறுத்தவரை பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து ஒரு படம் திரைக்கு கொண்டுவரப்படுகிறது. அதுவெளியான சில நிமிடத்தில் வெற்றி அல்லது தோல்வி என்று அறிவிக்கப்படுகிறது. தோல்வி என்றால் உடனே நாம் எடுத்த முடிவு, திறமை எல்லாமே கேள்விக்குள்ளாகிறது. அதுவெற்றி அடைந்தால் சரியான பாதை என்று முடிவெடுக்கிறோம். கமலை பொறுத்தவரை எவ்வளவோ தடைகளை எதிர்கொண்டும் அவர் ஒருபோதும் தனது கடமையிலிருந்து விலகி சென்றதில்லை. இவ்வாறு பூஜாகுமார் கூறினார்.