வடக்கில் முகநூல் மூலம் பெண்களை குறிவைத்து நடத்தப்படும் மாபெரும் மோசடி அம்பலம்

வவுனியா உட்பட வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பெண்களை இலக்குவைத்து அதிகமாக பணம் வசூலிக்கும் சம்பவங்கள் இடம்பெறுவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இனம் தெரியாத நபர் ஒருவர் பெண்களுடன் முகநூல் மூலம் நட்பாகி தான் பிரித்தானியாவில் இருப்பதாக தெரிவித்து குறித்த பெண்ணுக்கு பரிசுப் பொருட்கள் வாங்கி அதனை இலங்கைக்கு அனுப்புவதாக தெரிவிப்பார்.

அல்லது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு உதவி செய்வதாக பல இலட்ச கணக்கில் பெறுமதியான பொருட்களை, முகநூல் நண்பிகளுக்கு காண்பித்து அதனை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக ஓர் பொதி நிறுவனத்தின் துண்டையும் காண்பிப்பார்.

இதன் பின் ஒரு வார காலத்தில் இலங்கை இலக்கம் ஒன்றிலிருந்து குறித்த பெண்ணிற்கு அழைப்பு ஒன்று வரும். அதில் நபர் ஒருவர் தான் இலங்கை சுங்க திணைக்கள அதிகாரி என்றும், தங்களுக்கு பொதி ஒன்று வந்துள்ளதாகவும், அது பல இலட்சம் பெறுமதி ஆனது எனவே அதற்குரிய வரி பணமாக இரண்டு இலட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை குறித்த வங்கி இலக்கத்தில் வைப்பிலிடுமாறு தெரிவிக்கின்றனர்.

இதனை நம்பி குறித்த பெண்கள் பணத்தை வங்கியில் வைப்பிலிடுகிறார்கள்.

அதன் பின் குறித்த முகநூல் மற்றும் தொலைபேசிகள் செயலிழக்கின்றது. இவ்வாறு பல பெண்கள் பாதிப்புக்குள்ளாகி பொலிஸில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் இதுவரையிலும் எந்தவிதமான நடவடிக்கையும் பொலிஸ் தரப்பில் எடுக்கப்பட்டவில்லை என குற்றம் சுமத்தப்படுகின்றது.

வவுனியா - கோதண்ட நொச்சிகுளம், தரணிக்குளம், குருமன்காடு பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்கள் வவுனியா விசேட குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

யாழ் நகர் பகுதியிலும் பல பெண்கள் குறித்த மோசடியில் சிக்கி தங்கள் பணத்தை இழந்துள்ளனர் எனவும் தெரியவருகின்றது.