கண்டபடி கதைச்சாயே கலா அக்கா!! கண்டம் பண்ணிட்டாங்களே உன்னைய!! 2ம் பகுதி

2002ம் ஆண்டு புலிகள், அரசு சமாதான உடன்படிக்கை நேரத்தில் அப்போதைய இந்து கலாச்சார அமைச்சராக இருந்த மகேஸ்வரன் குறித்த உடன்படிக்கை தொடர்பில் கடும் அதிருப்தியில் இருந்ததுடன் சமாதானப்பேச்சுவார்த்தைகளில் எந்தவித கருசனையும் காட்டாது இருந்தார்.

தனது வர்த்தக நடவடிக்கைகள் குறிப்பாக ஏ9 வீதி திறந்தால் கப்பல் மூலம் நடைபெறும் தனது வர்த்தகம் பாதிக்கப்பட்டுவிடும் என்ற கவலையே அவருக்கு இருந்தது.

ஏ9 வீதி திறந்த போது விடுதலைப்புலிகள் அப்பாதையூடாக அரச, தனியார் போக்குவரத்து சேவைகளை ஈடுபடுத்துவதற்கு அனுமதிக்கவில்லை. முகமாலையில் இருந்து ஓமந்தை வரை தாமே போக்குவரத்து சேவைகளைச் செய்து வந்தார்கள். தனி நபர்களின் வாகனங்கள் குறிப்பாக ஹயஸ் வாகனங்களில் மக்கள் செல்வதற்கு அனுமதித்த புலிகள் அவ் வாகனங்களில் செல்லும் ஒவ்வொருத்தருக்கும் அந் நேரம் 350 ரூபா பணத்தை அந்த வாகனச்சாரதியிடம் வசூலித்துவிட்டே அனுமதித்திருந்தார்கள். ஹயஸ் வாகன சேவையை புலிகள் அனுமதித்ததற்கு முக்கிய காரணம் வெளிநாட்டுத் தமிழர்கள் வந்து போவதற்காகவே.

புலிகள் ஒரு நாளில் போக்குவரத்தின் மூலமும் பொருட்களை ஏற்றியிறக்கி வரி வசூழிப்பதன் மூலமும் நாள் ஒன்றுக்கு அந் நேரத்திலேயே 2 கோடிரூபா பணம் பெற்று வருவதை அறிந்த மகேஸ்வரனுக்கு வயிறு எரிந்தது. தனது வர்த்தகத்தில் புலிகள் ஆப்பு வைத்துவிட்டார்கள் என்பதே முக்கிய காரணமாகும்.

இவ்வாறான நிலையில் ஏ9 வீதி திறந்து சரியாக ஒரு மாதத்தில் மகேஸ்வரன் புலிகளின் அனுமதியையும் பெறாது பத்திரிகைகளில் அறிவித்து யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு நேரடி பஸ் சேவை மகேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது எனவும் செய்தி வெளியிடச் செய்தார். மகேஸ்வரன் தலைமையில் பொதுமக்களை ஏற்றிக் கொண்டு முகமாலைவரை சென்றது பஸ். முகமாலைக்கு உள்ளே மகேஸ்வரனின் பஸ்சை வரவழைத்து  முகமாலையில் புலிகளின் முன்னணி காவலரில் எந்தவித சோதனையும் செய்யாது பளை வரை பாதுகாப்புடன் கொண்டு சென்றனர் புலிகள். மகேஸ்வரனுக்கே புலிகளின் மரியாதை பெரும் ஆச்சரியமாகவும் சந்தோசமாகவும் இருந்துள்ளது. ஆனால் அந்த ஆச்சரியம் ஒரு சொற்ப நேரமே நீடித்தது. மகேஸ்வரின் பஸ்சில் இருந்த பொதுமக்கள் பளையில் வைத்து புலிகளின் பஸ்சில் கடும் சோதனைக்குப் பின் ஏற்றபட்டடார்கள். மகேஸ்வரன் பார்த்துக் கொண்டு இருக்கும் போது மகேஸ்வரன் கொண்டு சென்ற பஸ்சின் சில்லுகளுக்கு துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டு காற்று இறக்கப்பட்டது. பஸ் சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் பிடுங்கப்பட்டு மகேஸ்வரன் உட்பட்டவர்கள் யாழ்ப்பாணத்துக்கு புலிகளால் கடும் எச்சரிக்கை செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

புலிகள் பஸ்சின் ரயருக்கு சுட்ட தகவல் பத்திரிகைகளில் வெளிவரவில்லை என்பதுடன் பஸ் திருப்பி அனுப்பப்பட்டது என்ற செய்தியே பத்திரிகைகளில் வெளிவந்தது.

2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட முயன்ற மகேஸ்வரனை புலிகள் அடித்துத் துரத்திய சம்பவம் அனைவருக்கும் தெரிந்த விடயம். அந் நேரம் மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவதற்கு ஒற்றைக்காலில் நின்றார். அதற்காக புலிகளின் முக்கியஸ்தர்களைச் சந்திக்க முயன்றார். அதற்காக கொக்குவில் பொற்பதியில் அமைந்திருந்த புலிகளின் யாழ் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த இளம்பருதியிடம் சென்று அப்போதய புலிகளின் அரசியல்தலைவராக இருந்த தமிழ்ச்செல்வனை சந்திப்பதற்கு அனுமதி கேட்டார். ஆனால் அதற்கு இளம்பருதி மறுத்துவிட்டார். ஆனால் மகேஸ்வரன் அந் நேரத்தில் புலிகளின் கலைகலாச்சாரப் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த புதுவை இரத்தினதுரையை அணுகி வன்னிக்குச் சென்று யாழ்ப்பாணத் தேர்தலில் ஐ.தே.க சார்பாக போட்டியிடுவதற்கு முயற்சித்தார். ஆனால் அவருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதே நேரத்தில் மட்டக்களப்பிலும் ஐ.தே.க சார்பாக போட்டியிடுவதற்கு பலர் முயன்று கொண்டிருந்தும் அதற்கு புலிகள் இடம்கொடுக்கவில்லை. அதையும் மீறி போட்டியிட்ட ஒருவர் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதும் அனைவருக்கும் தெரிந்த விடயம். இந் நிலையில் புலிகள், மகேஸ்வரனை தேர்தலில் போட்டியிட்டு பெரும்பாண்மைக் கட்சிக்கு வாக்கைச் சேர்த்து தமிழர்களின் வாக்கை சிதறடிக்க  வேண்டாம் என கடுமையாக எச்சரித்திருந்தனர்.

மகேஸ்வரனை புலிகளின் யாழ்மாவட்ட புலனாய்வுத்துறைக்குப் பொறுப்பான ஒருவரை சந்திக்குமாறும் குறித்த பொறுப்பாளர் தங்கியிருந்த இடமான யாழ் பலாலி வீதியில் தபால்பெட்டி சந்திக்கு முன்னால் உள்ள ஒரு ஒழுங்கைக்குள் இருந்த வீட்டின் முகவரியும் புலிகளின் யாழ்மாவட்ட அரசியல்துறையினரால்

மகேஸ்வரனுக்கு தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அதற்கு மகேஸ்வரன் மறுப்புத் தெரிவித்து தன்னை வன்னிப் புலிகளின் தலைமையை சந்திக்க அனுமதி தருமாறு கேட்ட போது மகேஸ்வரனுக்கு திரும்பவும்  புலிகளால் கடும் எச்சரிக்கை விடப்பட்டது.

இதனையடுத்து உடனடியாக மகேஸ்வரன் தனது றுாட்டை மாற்றி கொழும்பில் போட்டியிட ஆயத்தமானார். ஆனால் ஏற்கெனவே  கொழும்பு  தமிழர்களின்

வாக்குப் பலத்தை தன் வசம் வைத்திருந்த மேலக   மக்கள்   முன்னணியின் தலைவர்   மனோ   கணேசனுக்கும் கொழும்பில் போட்டியிட முற்பட்ட மகேஸ்வரனுக்கும்  இடையில்  பகிரங்க மோதல் வலுப்பெற்றது.

அத்தேர்தல்  காலத்தில்  மனோ கணேசன்  எம்.பி.யின்  கோட்;டை  என்று வர்ணிக்கப்படும்  கொட்டாஞ்சேனையின் ஜிந்துப்பிட்டிப்  பகுதியில்  வைத்து மகேஸ்வரன் மீது கொலை முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டு  இருந்தது.  அச்சம்பவத்தில் கழுத்துப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு  இலக்காகி  மகேஸ்வரன் படுகாயமடைந்திருந்தார். மேலக   மக்கள்   முன்னணியே தம்மைக் கொலை செய்ய முயற்சித்தாக மகேஸ்வரன்  குற்றம்  சாட்டியிருந்த போதும், அக்கட்சியின் தலைவர் மனோ கணேசன்  அதனை  மறுத்திருந்ததுடன், மகேஸ்வரனைக்  கண்டபடி  தாக்கி  அறிக்கையும் விட்டிருந்தார்.

அந்தக் காலத்தில் வெளியாகி கொழும்புத் தமிழ் பத்திரிகைகளை பார்த்தால் உண்மை விளங்கும். மகேஸ்வரன் கழுத்தில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் உயிர் தப்பிய பின்னர் தனது நெருங்கியவர்களுக்கும் அந் நேரம் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்காவுக்கும் மனோகணேசன் புலிகளின் துணையுடன் தன்னை கொலை செய்ய முயன்றார் என தெரிவித்திருந்தார்.

அத்துடன் மனோகணேசனுடன் புலிகள் ஒப்பந்தம் செய்து வைத்திருப்பதாகவும் கொழும்பில் புலிகள் பாதுகாப்பாக தங்கி நிற்பதற்கும் ஆயுதங்கள் கடத்துவதற்கும் வர்த்தகர்களிடம் கப்பம் பெறுவதற்கும் மனோகணேசனின் உதவியைப் பெற்றுள்ளதாகவும் சந்திரிக்கா உட்பட்டவர்களுக்கு மகேஸ்வரன் நேரடியாகவே முறையிட்டார். ஆனால் இந்த முறையீடு தொடர்பாக மகேஸ்வரன் பாராளுமன்றிலோ அல்லது ஊடகங்களிளோ எந்தவித அறிக்கையும் விடவில்லை.

ஆனால் மகேஸ்வரன் சொன்ன முறைப்பாடுகளை சந்திரிக்கா கவனத்தில் எடுத்தாரா இல்லையா என்பது ஒருபுறமிருக்க புலிகள் மனோகணேசன் மூலம்  கொழும்பில் ஆழமாக வேரூன்றும் நடவடிக்கையில் ஈடுபட்டமை கொழும்பில் புலிகளுடன் நெருக்கமாக இருந்தவர்கள் அறிவார்கள்.

தன்னை புலிகள் துளியும் கவனத்தில் எடுக்கின்றார்கள் இல்லை என்பதை அறிந்த மகேஸ்வரன், ஏற்கனவே புலிகளால் பிடிக்கப்பட்டு 3 நாட்கள் அசிங்கப்படுத்தப்படு 4 கோடிரூபா கொடுத்து வெளியே வந்த சம்பவத்தையும் கவனத்தில் எடுத்து புலிகளின் புலனாய்வாளர்கள் மற்றும் முகவர்களை அரசாங்கத்துக்கு காட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

இக் காட்டிக் கொடுப்பு நடவடிக்கையில் வன்னியிலிருந்து கொழும்பு வந்து தங்கியிருந்த பல புலிகள் எங்கே எனத் தெரியாது மாயமாகினர். 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை புலிகளுக்கே தெரியாது கொழும்பில் மாயமாகியவர்கள் குறைந்தது 30 பேருக்கு மேல் இருப்பார்கள். தகவல்கள் கன கச்சிதமாக மகேஸ்வரனால் அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்டது.

இந் நிலையில் தனக்கு ஈ.பி.டி.பியினரால் கடும் அச்சுறுத்தல் இருப்பதாக கூறுி அரசாங்கத்திடமிருந்து மகேஸ்வரன் மேலதிக பாதுகாப்பைப் பெற்றார். இதுவும் புலிகளுக்கு சந்தேகத்தை கொடுத்தது. இதே வேளை மகேஸ்வரனின் வர்த்தக நடவடிக்கைகளில் முக்கியமாக செயற்பட்ட ஒருவர் வன்னிப் பகுதியில் வைத்து புலிகளால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அதன் குறித்த நபர் வீடு திரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 மகேஸ்வரனின் நெருங்கிய கூட்டாளியான  பேபியன் எனப்படும் முத்துக்குமார் சிவபாலன் 2007 டிசம்வர் மாதம் 21 ஆம் நாள் யாரால் சுடப்பட்டார்? ஏன் சுடப்பட்டார் என்பதை இன்னொரு பதிவில் தருகின்றேன்.

ஐ.தே.க கட்சியில் இருந்து கொண்டு புலிகளை கடந்த திங்கட்கிழமை புகழந்து தள்ளிய விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக மனோ கணேசன் விடுத்த ஊடக பேட்டிகளைப் பார்த்த பின்னரே இந்தப் பதிவை எழுத வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது.

மனோ கணேசனின் கோட்டைக்குள் வைத்து மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டது  புலிகளால் என்பது அப்பட்டமான உண்மை என்பதுடன் மகேஸ்வரனை புலிகள் கொல்வதற்கு முற்று முழுதான காரணகர்த்தா யார் என்பதையும் இந்த தகவல்களை வாசித்தவர்கள் கருத்தில் கொள்ளல் வேண்டும்.

திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களே!!!

தற்போது நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் உள்ளது. முன்னைய காலங்களில் சுட்டுக்கொல்லப்பட்ட பல முக்கியஸ்தர்களின் விசாரணைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந் நிலையில் ஏன் நீங்கள் மகேஸ்வரனின் கொலை தொடர்பா மீண்டும் ஒரு விசாரணையை நடாத்துவதற்கு நல்லாட்சி அரசாங்கத்தை கோரக்கூடாது.

விடுதலைப்புலிகளின் இலக்கத்தகடு பெற்று முழு நேர புலியாக இருந்த கிறிஸ்தோபர் வலன்ரின் என்ற முழுப் பெயரைக் கொண்ட, வசந்தன் என இயக்கப் பெயரைக் கொண்ட, யாழ் குருநகரைச் சேர்ந்தவரின் பெற்றோர், உறவுகள் தற்போதும் குருநகரில் வசிக்கின்றார்கள். அத்துடன் வசந்தனுக்கு 2012ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் துாக்குத் தண்டனை வழங்கப்பட்டது. குறித்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த போது நீங்கள் ஏன் டக்ளஸ்தேவானந்தாவும் இந்தக் கொலைக்கு முழுக்காரணமானவர் என்று உங்களது சட்டத்தரணிகள் ஊடாக வழக்கை கொண்டு நடாத்தவில்லை??

டக்ளஸ்தான் கொலை செய்ய துாண்டியிருந்தார் என்றால் வசந்தனிலும் பார்க்க டக்ளசிற்கே துாக்குத் தண்டனை கட்டாயம் வழங்கப்படல் வேண்டும். ஆனால் டக்ளஸ் தப்பிவிட்டது ஏன்? அல்லது நீங்களே திட்டமிட்டு டக்ளசை தப்ப வைத்தீர்களா?

மகேஸ்வரன் கொல்லப்பட்ட பின்னர் மகேஸ்வரனின் தம்பிகள் டக்ளசுடன் மிக நெருக்கமான உறவைப் பேணுகின்றார்கள் என்பது உங்களுக்கு முழுமையாகத் தெரிந்த உண்மை. அதுவும் மகேஸ்வரனின் தம்பியான துவாரகேஸ்வரன் டக்ளஸ்தேவானந்தாவுடன் கட்டிப் பிடித்து உறவு கொண்டாடுகின்றார்.  டக்ளசின் கொழும்பு வீட்டில் பொருத்தப்பட்டிருக்கிற சி.சி.ரீவி கமராவும் இதற்கு சாட்சி சொல்லும்.

உங்களுடன் தற்போதும் நெருங்கி ஒட்டியுறவாடுபவர்களில் இருவர் புலிகளுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தாங்கள் புலிகளின் உளவுத்துறைக்கு நெருக்கமாக இருந்தவர்கள் எனவும் அவர்களே பலருக்குத் தெரிவித்து வருகின்றார்கள். அவர்களில் ஒருவர் கொழும்பில் பிரபல தமிழ் பத்திரிகை ஒன்றில் முக்கிய பதவியில் இருக்கிறார். இன்னொருவன் நோர்வேயில் இருக்கின்றான். (இவர்கைளைப் பற்றியும் இவர்கள் யார் என்பது பற்றியும் இவர்களது திருவிளையாடல்கள் பற்றியும் சந்தர்ப்பம் வரும்போது தருவேன்) இவர்கள் இருவருடனும் ஏன் நீங்கள் நெருக்கமாக உள்ளீர்கள்??

ஒரு வேளை நீங்களே குறித்த இருவர் ஊடக புலிகளைக் கொண்டு மகேஸ்வரனை திட்டமிட்டுக் கொலை செய்துவிட்டு மகேஸ்வரனின் சொத்தையும் அனுபவித்துக் கொண்டு உல்லாச வாழ்க்கை நடாதுகின்றீர்கள் என்று ஏன் உங்களை மற்றர்கள் குற்றம் சொல்லக்கூடாது??

நல்லுாரில் வைத்து வருசப்பிறப்பு அன்று மகேஸ்வரனின் தம்பி துவாரகேஸ்வரனுக்கு அசிற் ஊத்திய நீங்கள் இவ்வாறான செயற்பாட்டையும் ஏன் செய்யமாட்டீர்கள் என்று மற்றவர்கள் யோசிக்க மாட்டார்களா??

வித்தியா கொலை வழக்கில் நீங்கள் எவ்வாறு செயற்பட்டுள்ளீர்கள் என்பது குடாநாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். அத்துடன் மேலே உள்ள விடயங்களையும் குடாநாட்டு மக்கள் உட்பட அனைத்து தமிழ் மக்களும் வாசித்து அறி்ந்து உங்களைப் பற்றி முழுமையாக எடை போடவேண்டும் என்றே இந்தப் பதிவை நான் எழுதினேன்...

மேலும் தொடரும்

நன்றி

தமிழ்த்தேசியப் பற்றாளர்

T.V.Elian

 

இந்த தகவல் எமது இணையத்தளத்தின் மின்னஞ்சலுக்கு வந்த தகவலாகும். இது தொடர்பாக கௌரவ நாடாளுமன்ற உறுப்பனர் விஜயகலா மறுப்பு அல்லது கருத்து சொல்ல விரும்பினால் எமது மின்னஞ்சலான newjaffna@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு கருத்துக்களை அனுப்பலாம் ஊடக தர்மத்தின் படி நாம் நிச்சயம் அதனைப் பிரசுரிப்போம்.

நன்றி

ஆசிரியர் குழு