கட்டளை தலைமையகத்தின் ஏற்பாட்டில் கண்புரை நோயாளர்கள் 41 பேருக்கு கொழும்பில் இலவச சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது

கட்டளை தலைமையகத்தின் ஏற்பாட்டில் கண்புரை நோயாளர்கள் 41 பேருக்கு கொழும்பில் இலவச சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது

  அடுத்த கட்ட பயனாளிகளும் தயார் நிலையில்

இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தின் மனித நேய வேலை திட்டத்தின் கீழ் வட மாகாணத்தை குறிப்பாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த கட்ராக் நோயாளர்களுக்கு இலவச சத்திர சிகிச்சை மேற்கொள்கின்ற செயல் திட்டத்தின் முதல் கட்ட பயனாளிகள் 41 பேருக்கு கொழும்பில் கண்புரை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தென்னிலங்கையை சேர்ந்த வைத்திய நிபுணர்களின் ப்ங்கேற்புடன் கடந்த சனிக்கிழமை இவர்களுக்கு கண்புரை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்ட பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இவர்கள் யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டனர்.

இவர்களை யாழ்ப்பாணத்தில் இருந்து அழைத்து சென்று, சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தி, பராமரித்து, மீண்டும் திருப்பி அழைத்து வருகின்ற ஏற்பாடுகள் அனைத்தும் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் அறிவுறுத்தல்,வழிகாட்டல் ஆகியவற்றுக்கு அமைய இராணுவத்தின் மனித நேய வேலை திட்டங்களுக்கான நாடளாவிய இணைப்பாளர் ஏ. செல்வாவின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டன.

இச்செயல் திட்டத்தின் ஏனைய பயனாளிகளும் வருகின்ற வாரங்களில் கட்டம் கட்டமாக கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டு சத்திர சிகிச்சை வழங்கப்படுவார்கள் என்று தெரிவித்த இராணுவத்தின் மனித நேய வேலை திட்டங்களுக்கான நாடளாவிய இணைப்பாளர் ஏ. செல்வா முதல் கட்ட பயனாளிகளுக்கு இராணுவத்தால்50 இலட்சம் ரூபாய் பெறுமதிக்கும் அதிகமான சேவை வழங்கப்பட்டு உள்ளது என்று கூறினார்

வட மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் கட்ராக் நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்து கொண்டு செல்கின்றது. இந்நோயாளர்களில் அநேகர் வயோதிபர்கள் ஆவர். இதே நேரம் இந்நோயாளர்கள் சத்திர சிகிச்சை பெறுவதற்கு பெரும்பாலும் யாழ். போதனா வைத்தியசாலையையே நம்பி உள்ளனர் என்பதுடன் இவ்வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்கான சந்தர்ப்பத்தை ஒரு நோயாளி பெறுவற்கு பொதுவாக மூன்று மாதங்கள் வரை காத்திருக்க  வேண்டி உள்ளது..