கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளரின் அசமந்த போக்கு: முறைப்பாடுகளுடன் குவியும் மக்கள்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளரிடம் சேவைகளை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கரைச்சி பிரதேச செயலாளரிடம் காணி பிணக்கு , பிரதேச செயலகத்தில் ஏற்பட்ட தவறுகளை தெரிவிக்கும் போது அலட்சிய போக்காக “இன்று சென்று நாளை வா” என பல தடவைகள் பதிலளிப்பதாக பொது மக்கள் கூறியுள்ளனர்.

இதனால், தங்களுடைய பணிகளை விடுத்து பிரதேச செயலகத்திற்கு தினசரி செல்ல வேண்டியுள்ளதாகவும் முதியவர்கள், நோயாளிகள் என்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

யுத்தத்தினால் பாதிப்படைந்துள்ள மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாகும் வகையில் அரச உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

“காணி அரை ஏக்கர் என உறுதியில் உள்ள போதும் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட காணி அனுமதிப்பத்திரத்தில் கால் ஏக்கர் என தவறுதலாக அச்சிடப்பட்டு எனக்கு வழங்கப்பட்டது.

அதனை பிரதேச செயலாளரிடம் கேட்க சென்றால் . மிகுதி கால் ஏக்கரை உங்களது காணி உறுதியில் இணைக்க முடியாது. வேறு ஒருவரின் பெயரில் தருவதாக பதிலளிக்கின்றனர்.

எனது பெயரிலேயே அரை ஏக்கரையும் தறுமாறு கோரினால் காலதாமதித்து இழுத்தடிப்பு செய்கின்றனர்” என பிரதேச செயலாளரினால் பாதிப்படைந்த பெண்ணோருவர் தெரிவித்தார்

எனது காணிக்கு சுற்றுமதில் அமைப்பதற்கு அனுமதி கோரினால் தற்போது உங்களுக்கு சுற்றுமதில் தேவையில்லை என தெரிவித்து அனுப்புகின்றார்.

இவ்வாறு அசமந்த போக்காக பிரதேச செயலாளர் பதிலளிப்பதாக மேலும் ஒரு பொதுமகன் தெரிவித்தார். இவ்வாறு பிரதேச செயலாளர் மீது பல முறைப்பாடுகளை பொதுமக்கள் முன்வைக்கின்றனர்

இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களினால் மேலதிக அரசாங்க அதிபரிடம் முறைப்பாடொன்றும் செய்யப்பட்டுள்ளது.

மக்களின் வரிப்பணத்தில் சம்பளத்தினை பெற்றுக்கொள்ளும் அரச உத்தியோகத்தர்கள் இவ்வாறு அசமந்த போக்காக செயற்படுவது சரியா? மாவட்ட அரசாங்க அதிபரே இது உங்களின் கவனத்திற்கு.