கே.கே.எஸ். கடற்பரப்பில் ரூபா 2 கோடி பெறுமதியான தங்கக் கட்டிகளுடன் இருவர் கைது

“காங்கேசந்துறை கடற்பரப்பில் 2.2 கோடி ரூபா பெறுமதியான 3.7 கிலோ கிராம் தங்க பிஸ்கட்டுக்களை சட்டவிரோதமாக கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை கடற்பரப்பில் நேற்று மாலை சந்தேகத்துக்கிடமான படகு ஒன்று தொடர்பாக கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது. அதுதொடர்பில் கடற்படையினர் முன்னெடுத்த தேடுதலில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 100 கிராம் நிறையுடைய 37 தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட இருவரும் மாதகல் பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களிடமிருந்து மீட்கபட்ட தங்கத்தின் பெறுமதி 2 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடம் மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுக்கள் தெல்லிப்பளையில் உள்ள சுங்க திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன” என்று கடற்படையினர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.