வவுனியா பாடசாலை மாணவன் மீது நடவடிக்கை எடுத்த ஆசிரியரை இடமாற்றிய அதிகாரி!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் மாணவர்கள் சீரான முறையில் சீருடைகள்  அணியாமல் வருவது தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளாரின் மகன் உட்பட சில மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்த ஆசிரியர் திடீரென வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக விசனம் தெரிவித்த பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி தி.திருவருள் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா தமிழ் மத்திய மாகாவித்தியாலயத்தில் மாணவர்கள், மாணவர்களுக்கு ஏற்றத்தகாத சீருடைகளை அணிந்து பாடசாலைக்கு சமூகமளித்து வந்திருந்தமையை பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் என்பன பாடசாலை நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்டியிருந்தோம்.

இதன் காரணமாக பாடசாலையில் அக்கறை கொண்டு ஆசிரியர்கள் சிலர் சீருடை தொடர்பில் கவனமெடுத்து வந்திருந்தனர். மாணவர்களை சீருடையில் மாற்றத்தை செய்யுமாறு கோரியும், சில அதிகாரிகளின் பிள்ளைகள் என தம்மை அடையாளப்படுத்துபவர்கள் இதற்கு இடையூறாக காணப்பட்டதுடன்
சீருடையை மிக மோசமாக அணிந்து வந்திருந்தனர்.

இதன் போது ஆசிரியர் ஒருவர் நடவடிக்கை எடுத்திருந்தார். அதில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் மகனும் உள்ளடங்கியுள்ளார். இவ்வாறான நிலையில் அவ் ஆசிரியரை கல்வி அமைச்சின் செயலாளர் உடனடியாக இடமாற்றம் செய்துள்ளார். எனவே, நாம் இந் நடவடிக்கை தொடர்பாக சட்ட நடவடிக்கையை கையாளவுள்ளோம் என தெரிவித்திருந்தார்.