வடக்கு மாகாணத்தில் புதிதாக எயிட்ஸ் நோயாளிகள்! வெளியான திடுக்கிடும் தகவல்கள்

வடக்கு மாகாணத்தில் இந்த வருட நடப்பாண்டில் புதிதாக 6 பேர் எச் ஐ வி தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளதுடன் அதில் மூன்று பேர் அண்மையில் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பாலியல் தொற்றுநோய் தடுப்பு சிகிச்சை பிரிவின் பொறுப்புவைத்திய அதிகாரி திருமதி தாரணி குருபரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் கடந்த 1987 ஆம் ஆண்டில் இருந்து அண்ணளவாக 80 பேருக்கு எயிட்ஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 45 பேரளவில் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட எச் ஐ வி சிகிச்சை பிரிவில் எச் ஐ வி தொற்றுக்கள்ளாகிய 39 பேர் வரையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

அதில் 9 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய 30பேரும் தற்போது யாழ் மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வருடம் வடக்கு மாகாணத்தில் 6 பேர் எச் ஐ வி தொற்றுக்கு உள்ளானவர்கள் என பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

அதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து ஒருவரும் மன்னார் மாவட்டத்தில் இருந்து ஒருவரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 4 பேரும் எச் ஐ வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்களில் 63 வயதுடைய ஒருவரும், இருவர் 50 தொடக்கம் 60 வயதுக்கு இடைப்பட்டவர்களாகவும், மூன்று பேர் 40 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவர்களில் 3 ஆண்களும், 3 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.மேலும் எச் ஐ வி தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்ட மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ஒரு நபரும் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 2 நபர்களும் அண்மையில் உயிரிழந்துள்ளார்.

இவர்கள் குறித்த எச் ஐ வி தொற்று ஏற்பட்டு உரிய நேரத்திற்கு சிகிச்சை பெறாத காரணத்தினால் எயிட்ஸ் நோய் தாக்கத்தின் இறுதி நிலையை அண்மித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மேற்குறித்த தரவுகள் வைத்தியசாலைகளில் பரிசோதனைக்கு வருபவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவலே அன்றி பரிசோதனை மேற்கொள்ளப்படாமல் பலர் எச் ஐ வி தொற்றுக்கு உள்ளாகி இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுகின்றன.

எனவே தொற்றுக்கள் பல வகையில் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதால் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளவும் எமது எதிர்கால சந்ததியை பாதுகாக்கவும் இன்றே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பது மிக மிக அவசியம் ஆகும் என அவர் மேலும் தெரிவித்தார்.