“சுமந்திரனுக்குச் சைவர்கள் வாக்களிக்க வேண்டாம்” யாழில் விடுக்கப்பட்ட கோரிக்கை!! (படங்கள்)

சுமந்திரனுக்கு எதிராக 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரிவழக்கு தாக்கல் செய்யவுள்ளேன் என மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

மறவன்புலவு பகுதியில் சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்ததினால் அமைக்கப்பட்டுவரும் புதிய கோவிலின் கருவறைக்குள் சுமந்திரனின் சுவரொட்டிகள் நேற்றைய தினம் இரவு ஒட்டப்பட்டிருந்தன.

சாவகச்சேரி அமைப்பாளர் சயந்தன் குழுவினரால் அந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதாக கருதப்படுகிறது. தேர்தல் விதிமுறைகளை மீறி ஆலயத்தின் கருவறைக்குள் தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது தொடர்பில் மறவன்புலவு சச்சிதானந்ததினால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் சாவகச்சேரி பொலிஸாரினால் குறித்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.

இது தொடர்பில் ஊடகங்களுக்குகருத்து தெரிவித்த சச்சிதானந்தம்,

சைவசமயத்தை இழிவுபடுத்தும் செயற்பாட்டில் சுமந்திரன் ஈடுபடுகின்றார். சைவக் கோயில்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் முகமாக அவருடைய தேர்தல் சுவரொட்டிகளை சைவக் கோயில்களில் கருவறைக்குள் ஒட்டியிருக்கின்றார்.

கருவறை என்பது சைவர்களுடைய நம்பிக்கைக்குரிய இடம். கருவறையிலேயே சுமந்திரன் தன்னுடைய தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டுவதன் மூலம் சைவ சமயத்தை இழிவுபடுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்.

தேர்தல் விதிமுறைகளையும் மீறி மக்களுடைய நம்பிக்கையையும் உடைத்து கிறிஸ்தவர்களுடைய மேலாதிக்கத்தினை உயர்த்தும் முகமாக கோயில் கருவறையிலேயே தேர்தல் சுவரொட்டிகளை 26ஆம் திகதி இரவு ஒட்டிருக்கிறார்.

இதை வன்மையாக கண்டிப்பதோடு அவரிடம் நூறு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன். அத்தோடு இந்த வீட்டுக்கு பொறுப்பான கட்சித் தலைவருக்கு எதிராகவும், சாவகச்சேரி தொகுதி வீட்டுக்கு பொறுப்பானவருக்கு எதிராகவும் வழக்கினை பதிவு செய்யவுள்ளேன்.

எனினும் இன்றைய தினம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதோடு தேர்தல் திணைக்களத்திலும் இது தொடர்பான முறைப்பாடு ஒன்றை நான் பதிவு செய்யவுள்ளேன்.

சைவ மக்கள் இயல்பாக வாழ்வதா அல்லது அவர்களுடைய கோவில்களை அழிப்பதும் கிறிஸ்தவர்களுடைய நோக்கமா என்பது இங்கே புலனாகின்றது. எனவே சைவர்கள் யாரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாமென நான் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *