“பதவி விலகல் தீர்மானத்தை மீளப் பெறுங்கள்” குருபரனிடம் கோரவுள்ள பல்கலை. பேரவை!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் சமர்ப்பித்த பதவி விலகல் கோரிக்கையை சீராய்ந்து மீளப்பெறுமாறு கனிவாகக் கோருவது என்று பல்கலைக்கழக பேரவை தீர்மானித்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவையின் இந்தத் தீர்மானம் தொடர்பில் பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி, கலாநிதி குருபரனுக்கு கடிதம் மூலம் அடுத்த வாரம் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவைக் கூட்டம் இன்று சனிக்கிழமை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

கலாநிதி குமாரவடிவேல் குருபரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை கடந்த 17ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு கலைப்பீடாதிபதி மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஊடாக அனுப்பி வைத்திருந்தார்.

தான் பதவி விலகுவதற்கான காரணமாக பல்கலைக்கழக பேரவை தன்னை சட்டத் தொழிலில் ஈடுபடுவதில் இருந்து தடை செய்துள்ளமையை காரணாமாக காட்டியிருந்தார்.

தன்னால் உயர் நீதிமன்றில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு பல்வேறு காரணங்களுக்காக விவாதத்திற்கு எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டிருக்க தான் இவ்விடயத்தில் இனியும் காத்திருப்பதில் பிரயோசனம் இல்லை என்றும் தொடர்ந்து தனது வாழ்வில் நிச்சயத்தன்மை இல்லாதிருக்க தான் அனுமதிக்கப் போவதில்லை என்று தனது பதவி விலகல் கடிதத்தில் கலாநிதி குருபரன் குறிப்பிட்டிருந்தார்.

சட்டக் கல்வி மீதான தனது ஆர்வத்தை ஒரு போதும் கைவிடப் போவதில்லை எனத் தனது கடித்ததில் குறிப்பிட்டிருந்த கலாநிதி குருபரன், உயர் நீதிமன்ற வழக்கை தொடர்ந்து கொண்டு நடத்தப் போவதாகவும் தனக்கு சார்பாக கட்டளை ஆக்கும் பட்சத்தில் மீள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்நுழைய விண்ணப்பிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் சமர்ப்பித்த பதவி விலகல் கோரிக்கை கடிதம் தகுதி வாய்ந்த அதிகாரியால் இன்று பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

அதன்போது சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் தனது பதவி விலகல் தொடர்பான தீர்மானத்தை சீராய்ந்து தனது கோரிக்கையை மீளப்பெறுமாறு கோருவது என்று பேரவையால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *