வாள்வெட்டுக் குழுக்களைக் கட்டுப்படுத்த அதிகாரம்! களத்தில் இறங்கியது இராணுவம்!!

வடக்கு மாகாணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வன்முறைகளில் ஈடுபடும் கும்பல்களைக் கட்டுப்படுத்தவும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளைத் தடுக்கவும் இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு மேலதிகமாக இராணும் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினருக்கு இவ்வாறு அரச உயர்மட்டத்தால் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் வாள்வெட்டு உள்ளிட்ட வன்முறைகள், மணல் கடத்தல் கும்பல்களில் அடாவடிகள் நீடித்து வந்த நிலையில் பொலிஸாரால் கட்டுப்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ளூர் தயாரிப்பு வெடிபொருள்களால் அச்சுறுத்தல் நிலை எழுந்திருந்தது.

அதுதொடர்பில் கடந்த 17ஆம் திகதி பலாலியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் படைகளின் உயர்மட்ட மாநாடு ஒன்று நடைபெற்றது.

இந்த மாநாட்டின் போது, யாழ்ப்பாணம் உள்பட வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாக அமையும் வாள்வெட்டுக் கும்பல்களின் அடாவடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளைத் தடுத்தல் ஆகியவற்றை இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் இராணுவத்தால் கைது செய்யப்படுவோர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைக்கு உள்படுத்தவேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இந்தத் தீர்மானத்துக்கு அரச உயர்மட்டமும் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் யாழ்ப்பாணத்தில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன்படி வாள்வெட்டு வன்முறை வழக்குகள் நிலுவையில் உள்ள சந்தேக நபர்களின் வீடுகளில் தேடுதல் நடத்தும் இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர், சந்தேக நபர்களைக் கைது செய்து பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கின்றனர்.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் சந்தேக நபர்கள் இருவரின் வீடுகளுக்கு கடந்த வாரம் சென்ற இராணுவம் வாள்களை மீட்டிருந்ததுடன் அவர்கள் இருவரையும் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தது. அவர்களில் ஒருவர் தாக்குதல் வழக்கு ஒன்றில் பிணையில் வெளியில் வந்தவராவார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *