சுமந்திரன் கூறியதை மன்னிக்க முடியாது ! மாவையிடம் அவசர கோரிக்கை

தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஒட்டு மொத்த ஆயுதப்போராட்டத்தையும் தவறு என்று குறிப்பிட்டு ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளமை மன்னிக்க முடியாத தவறு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவரும் டெலோ கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார் .

அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்….

ஆயுதப் போராட்டத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்தை பணிய வைத்து அரசியல் ரீதியாக பேசுவதற்கான ஓர் அங்கீகாரமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொண்டு எம் .ஏ. சுமந்திரன் இப்படியான கருத்துக்களை சொல்வதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அவருடைய கருத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.

அந்த வகையில் ஆயுதப் போராட்டத்தில் பொது மக்கள், போராளிகள் ஒட்டு மொத்தமாக உயிரை அர்ப்பணித்து உள்ளார்கள்.

ஆயுதப் போராட்டத்தின் ஊடாகத்தான் உலகளாவிய ரீதியில் எங்களுடைய இனப்பிரச்சினை வரலாறாக பதியப்பட்டுள்ளது.

ஆயுதப் போராட்டத்தின் ஊடாகத்தான் இனப்பிரச்சினை சார்ந்த விடயங்களை இன்றைக்கு இலங்கை அரசாங்கத்துடன் பேசும் ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது.

ஆகவே இந்த ஆயுதப் போராட்டத்தின் ஊடகத்தான் எங்களுடைய இனப்பிரச்சினை தொடர்பான முக்கிய விடயங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் சுமந்திரனின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறது.

தமிழரசுக் கட்சி இதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .

தமிழரசுக் கட்சி நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் தமிழிழ விடுதலை இயக்கம் இவ்விடயத்தில் நிச்சயமாக ஒரு சரியான முடிவை எடுக்கும்.

தமது கட்சி சுமந்திரன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .

ஆயுதப் போராட்டம் அகிம்சை போராட்டம் செய்ய இந்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து அதன் அடிப்படையில் தான் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அப்போராட்டம் வீறு கொண்டு எழுந்து இந்த அரசாங்கத்தை பணிய வைத்த வரலாறுகள் பல உண்டு.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாவதற்கு காரணமான நோக்கத்தை தனது கருத்து ஊடாக எம். ஏ. சுமந்திரன் சீர் குலைத்துள்ளார்.

அந்த வகையிலேயே தமிழரசுக் கட்சி சுமந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் கோரிக்கை முன்வைத்து இருக்கின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *